புனித அகிலத்திரட்டு அம்மானை

அத்தியாயம் – 11

திருஏடு வாசிப்பும், பாராயண உரையும்

அய்யா துணை

வைகுண்டர் முருகனுக்கு அருளல்

அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி
சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து
வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர
மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி
நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி
வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி
அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச்
செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும்
நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும்
கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால்
இத்தனை நாளும் என்னைக் கெணியாமல்
புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள்
இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள்
மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து
மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத்
தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள
நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே
கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே
தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது
தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே 20

நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது
தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே
ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி
வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள்
எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம்
அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன்
காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ
ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ
பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ
தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ
மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ
கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும்
விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ 40

கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ
ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம்
அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால்
வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே
நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும்
என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான்
மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே
நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார்
காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான்
அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார்
இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால்
உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில்
பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார்
அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த
செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம்
உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக்
கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் 60

அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால்
பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார்
அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி
இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று
ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார்
சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு
நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ
உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே
பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன்
விடியும் பொழுது வேசம் பலதணிவேன்
பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன்
வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும்
மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே
அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே
இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர

வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல்

அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும்
ஆதவனைச் சூழ் கணம்போல்
அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர்
ஆடியே பாடி வரவே
தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழ
சூழவளைந் தேழியல் படர்தே  80
சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச்
சூராதி சூர ரெனவே

செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத்
தேவர்சே வித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும்
சேவித்திரு புறமும் வரவே
அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமென
ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதிநாரா யணாவென
அமரரிசை கூறி வரவே

மத்தள முடுக்குபல வாத்திய மடடென
வானமதில் நின்ற திரவே
மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே
வானவர்க ளிசை கூறவே
தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச்
சங்கீதக் காரர் வரவே
சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு
சாஸ்திரக் காரர் வரவே

தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சில
தேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர்
சேவித் தியல்கூறி வரவே
நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென
நேரியர் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு
நீதென் குருவெனப் போற்றினார்

பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும்
பலவாங் கிரி குண்டமே
பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனே
பசுவா கிய நிசமே
தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த்
தெச்ச ணாபதி பூபனே
துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு
துவாரகா பதிக் கரசே

சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு
துச்சா வில்லு வீரா
சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது
தலையின்வழி தானே நடவாயே
துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடு
துச்சா வில்லு தீரா   100
சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய்
துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார்

தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத்
தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர
வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர
நாதமொடு சங்கு நகரா முழங்கிவர
மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத்
தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச்
சாத்திர வேத சாதிமுறை யோதிவர
நாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே
அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர
வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர
நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர
மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர
கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும்
கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே
மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே
தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய
வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே
வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர
தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே 120
ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர
வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற

செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல்

நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு
வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு
சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு
ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு
மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து
தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு
நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர்
நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து
செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே
இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன்
இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே
சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார்
அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார்
இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி
கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல்
நாள்வழியாய்ச்  சான்றோரை நியாயமில் லாதடித்தான்
சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து
என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை 140

ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு
நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு
இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம்
வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால்
என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான்
சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான்
இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ
ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து
எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்
மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன்
மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல்
மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி
மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே
நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக்
காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு 160

உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா
எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று
செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே
மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள்
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே
நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும்
உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே
தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால்
இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல்
எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து
மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன்
அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப
வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்
முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக
என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது
ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள்
பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது
கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து
தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை 180

கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு
இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு
எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி
ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து
பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம்
எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே
ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே
மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில்
பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக்
கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய்
நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப்
பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி
மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே
தாமுனிந் தையா தவறாத மாமுனியும்
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து 200
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர

பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல்

கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத்
தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர
அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி
மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி
நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில்
தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு
வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை
பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு
என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார்
தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப்
பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும்
தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும்
மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும்
சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர
மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத்
துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட
இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப்
புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே 220
நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி
பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்
கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்
கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்

வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்

நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே
கடந்து முன்போன காண்டா மிருகமொடு
சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்
பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்
ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை
செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்
கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த
சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்
தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப்
பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து
வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு
சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே
வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று
கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்
கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்
செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய 240

வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே
தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்
என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே
நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்
ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது
இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ
இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்
குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்
என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு
அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்
நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்
கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்
இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்
விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்
வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி
சூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்து
வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்
கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார் 260
மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி
கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்
திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே

கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்

முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு
வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே
இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்
சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்
தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்
நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்
ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ
இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து
நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே
கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்
ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்
திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து
கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து
ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று
காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்
தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று
நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் 280

நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க
வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி
எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே
நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை
வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை
சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக்
காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே
நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார்

நல்ல குலதெய்வங்கள் மறைதல்

நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து
எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே
இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும்
நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும்
முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த்
துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும்
கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக்
கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும்
இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண்
கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார்

நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார்
தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்300
மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம்
நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார்

தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி
மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார்
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல்
மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே

வைகுண்டர் பகவதிக்கு அருளல்

கண்ணான நாதன் கமலக் குருநாதன்
வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை
நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்
கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து
நன்மை யுடைய நாயகியே சுந்தரியே
பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான
உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென
எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்
எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்
ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு
தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்
உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்
பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க 320
என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்
அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்

வைகுண்டர் மணவைப்பதி ஏகல்

நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே
சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்
தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே
கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்
நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே
திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க
கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்
பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து
ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து
மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்
நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்
தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்
நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே
தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே
உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே
என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்
அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று
வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி 340

தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே
மான முனியே மறைநாலுங் கற்றவனே
ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே
பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ
நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே
மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்

கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல்

வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக்
கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய
வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே
உள்ளதெனக் கின்னதென் றுரை

பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி
வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின்
கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி
தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான்

கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல்

அய்யாவே வேத ஆதிநா ராயணரே
மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும்
பரராச மாமுனிவன் பாலனென முனிவன்
விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம்
தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும் 360

வாராய் முனியே மதலையுனக் கிங்கேது
அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு
இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில்
பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும்
வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில்
பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும்
நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும்
யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும்
ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும்
மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில்
துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும்
இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள்
அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே
துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே
நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது
சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து
காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப்
பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக்
கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல் 380

வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்
ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்
ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்
முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்
தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்
கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்
எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க
நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்
வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி
என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்
பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்

வேதவியாசர் முக்காலம் உரைத்தல்

அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது
மூல முதலை முத்தி முகந்துகொண்டு
காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று
ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து
சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்
மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்
அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்
சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும் 400

வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்
விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்
அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்
சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்
சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்
நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்
பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்
சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்
நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக
வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும்
எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல்
அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப்
பொன்னான நாரா யணர்ம கேந்திரனும்
நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து
வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில்
புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால்
அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில்
குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி
நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப்
பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக் 420

கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து
ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்
சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்
பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில்
தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக்
கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து
நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி
ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி
உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில்
தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து
ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில்  440

வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்
சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்
பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்
சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து
வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து
ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்
காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்
செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்
அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே
மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்
எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்
வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்
மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்
வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே
குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும்
கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும்
நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே
பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும்
எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே

ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும் 460
ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்
நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்
தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான்

தெச்சணாபூமி வளம்

இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன்
அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன்
துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில்
பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே
நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை
இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை
தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான்
மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது
ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க
கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு
சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள்
எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு
மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு
கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு
பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு
சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு
தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு 480

சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு
மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு
சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு
அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு
பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு
வாவி யுறைநகரு வைகைக் குருநகரு
தாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு
சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்
நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு
பசுவும் புலியம் பாவித்திருந் தநகரு
கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு
அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்
பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்
தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு
பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு
நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு
சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு
ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே
திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு
சம்பத்துக் கேற்ற சகல குருநாடு  500

இன்பம் வளரும் இசைந்த குருநாடு
ஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்க
நீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய்
கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப்
பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து
அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார்
சிந்த னருளால் சீறி யொருகடுவாய்
பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து
இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே
என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும்
தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே
அப்போ பசுவும் அந்த முனியடுக்கல்
இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்கு
மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால்
தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும்
வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்து
உந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால்
என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார்
உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய்
என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும் 520

ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான்
கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலே
வெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானை
பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல்
விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவே
பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே
முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல்
இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும்
சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலே
இரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால்
பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவே
உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்
திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்
வந்து இரந்து வருசமொன் றானதின்பின்
முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று
பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து
வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை
அப்படியே தோசம் அகன்று அறம்வளரும்
உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே

தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா 540
மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு
பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்
அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான்

நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து
வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று
அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால்
தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார்

வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச்
சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து
இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே
விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார்

திருவாசகம்-3

கவியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம்

(வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே, உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே.

ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும், மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு லாடந் திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம் ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற சட்டம்போல் நடந்து கொள்வாராகவும். அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கு படியே வரும். அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம். 1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்ட மாய் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான்.

ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே, இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும் பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை ஆராடு நீராடு தீபரணை சாந்தி காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம் தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம் கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக் குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்.)

என்றிந்த விவர மெல்லாம் எழுதியே
உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை
பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார்

நாதன் குருநாதன் நாரா யணநாதன்
மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்
மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்
இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்
மணமான நாதன் மகாபரனைத் தானாடி 560

வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்
தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்
மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத்
தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க
மூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து
ஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்க
வீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில்
பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவே
துள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானை
வைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவே
மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில்
யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ள
ஓமப் பசாசுகளை ஒதுங்கவுப தேசித்தார்
மேல்நடப்பை யெல்லாம் வித்தார நாரணரும்
தூல்நடப் பாகத் துறந்துதுறந் தேபடித்தார்
கண்டவர்க ளெல்லாம் கருத்தோ டறியாமல்
வண்டப் புலப்பமென வாக்குரைத் தேபோனார்
பத்துமா தம்வரையும் பார்நடப் புள்ளதையும்
முற்று மொருகுடைக்குள் உலகாள்வ தும்படித்தார்
எல்லா நடப்பும் இவர்படித்த தின்பிறகு 580

வல்லாண்மை யான வைகுண்டப் பெம்மானும்
உகஞ்சோ திக்க உற்றார்கா ணம்மானை
தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில்
பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து
உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார்
நாரா யணரும் நல்லவை குண்டமெனப்
பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில்
மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத்
தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை

அய்யா வைகுண்டர் திருத்தவம்

உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்
தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி
மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று
அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார்

வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க
நந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி
முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றி
சந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே

நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசி
சாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்று
வாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று 600
ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா

ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்று
மாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்று
நீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்று
ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தா ரையா

கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப்
பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக்
கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி
இரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார்

மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்
தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்து
வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்து
துணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார்

முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும்
கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்த
அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும்
செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார்

இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார் 621