புனித அகிலத்திரட்டு அம்மானை

அத்தியாயம் – 12

திருஏடு வாசிப்பும், பாராயண உரையும்

🐚திருஏடுவாசிப்பு

 

வாசித்தவர்கள்:

1. ரெத்தினபாய் அம்மா
2. சாந்த குமாரி அம்மா
3. ரேணுகாதேவி அம்மா
4. கலைவாணி அம்மா
5. ராதா கிருஷ்ணன் அய்யா

 

🐚பாராயண உரை

 

 

📖உலகப் பொதுமறையாம் “அகிலத்திரட்டு அம்மானைக்கு” நமது திரு. சிவதவசி அய்யா அவர்களின் முழுமையான பாராயண உரையை

திருஏடுவாசிப்பு மற்றும் விளக்கவுரை 

 

விளக்கவுரை:

சிவ தவசி அய்யா

வாசித்தவர்கள்:

1. ரெத்தினபாய் அம்மா
2. சாந்த குமாரி அம்மா
3. ரேணுகாதேவி அம்மா
4. கலைவாணி அம்மா
5. ராதா கிருஷ்ணன் அய்யா

அய்யா துணை

நாரா யணரே நல்லவை குண்டமெனச்
சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்
ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்து
வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே
நின்றார் தவசு நெடியநா ராயணரும்
குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே
கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல்
உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல்
அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார்
தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது
ஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசு
வாசக் குழலுமையை மதலை யுருவாக்க
வேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக்
கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்று
அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே
கற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில்
சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனை
வீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்க
ஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான்
பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே 20

சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்து
அரகரா அவள்தான் அன்றுநின் றதவமும்
இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய்
அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தே
சீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தே
நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும்
எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம்
வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண்
சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப்
பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால்
பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய்
நாமிருப் பதுவோ நாலு திரையதனுள்
ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம்
இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாது
வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில்
என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால்
அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர்
நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானை
செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும்

அய்யா மக்களுக்கு அருளல்

சீமையைம்பத் தாறு தேச நருட்களையும் 40
நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே
செல்லவை குண்டச் சீமானு மப்பொழுது
வல்ல தவமும் மனதுளரா தேமுடித்து
உலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத்
தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானை
வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு
நடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும்
அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவே
சாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமே
நாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார்
நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல்
தினந்தோறும் வந்து சேரும் நருட்களது
எண்ணக் கூடாது எவராலு மன்போரே
திண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரே
சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல்
சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன்
ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன்
கம்மாள னீழன் கருமற வன்பரவன்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர் 60

சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும்
முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானை
ஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்த
வாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரே
கிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும்
இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய்
ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில்
வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல்
சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய்
ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும்
சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார்
உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும்
சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார்
பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல்
திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார்
தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார்
கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டி
அந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச்
சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார்
உடலை யுருக்கும் உற்ற சயஇருமல் 80

குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த்
தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப்
பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண்
கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லி
என்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரே
பதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில்
விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார்
மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில்
ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானை
நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்
அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்
ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்
கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்
முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே
இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்
வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே
மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்
சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து
கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது
கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம் 100

தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்
செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்
அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு
எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே
பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்
தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி
தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு
சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்
சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச்
சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி
நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி
சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று
ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்
எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே
அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்
அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே
எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே
தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது
மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க
இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து 120

மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்
சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி
மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்
தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து
ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே
நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்
போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்
சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்
பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்
மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்
மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்
வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து
சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் 4

1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு, கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி, உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி, மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே, மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே, முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே, முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே, ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே, இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே, வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே, வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல் உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே, பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந் தன்னே என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார்.

அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ் சரி, இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள். பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார். எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம் ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க, அதையறிந்து நீங்களும் ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார், உடனதுகளெல்லாம் அய்யாவாணை நாங்களொன் றும் ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார். உடனே நாராயண வைகுண்ட சுவாமி தானே ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது, பேய் செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது பேய் செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் பேயை எரிக்கவேணு மென்று நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்.

பேய்களை எரித்தல்

பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்

வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி 140
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார்

விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்
பதினை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்

பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம்
மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார்

நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே

அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார்

ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக
ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று 160
தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே

கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்

உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்
இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்

ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது
வாச மலரோனும் மற்றோரும் போகரிது
என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி
அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை
உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்
திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி
பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி
மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்
சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி
ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்
என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம் 180

சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே
அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை
பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்
நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை
தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை
நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்
எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்
அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்
சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்
போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே
கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்
அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்
கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி
அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்
கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று
மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து
இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே
வரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவே
துரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண்
பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம் 200

இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவே
என்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன்
அன்று தலையோடு அந்தமுனி தானடித்து
வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால்
மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ
சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமே
பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே
வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும்
ஆரவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான்
சீர்பரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே
உங்களுட மூப்பு உகத்திலினி வாராது
எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண்
எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண்
பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்கு
ஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்து
நானே யிதுமேவித் தாறேனென் றிப்போது
இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும்
எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில்
ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய்
நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து 220

அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்று
நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்
காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்
தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே
பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி 240

பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்
எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது
மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே
அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்
எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே
நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து
ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்
நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து
ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து 260

நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான
வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே
ஆனதினால் பேய்க ள் அந்நீசக் குலமதினால்
வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்
என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்
நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை
முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே
என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை
மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி
நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி
எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை
வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி
என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்
பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்
நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்
கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி
மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்
தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை
அப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும்
இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத் 280

தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக்
கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரே
என்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுது
அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார்
காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும்
சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள்
ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம்
வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார்
உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும்
திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும்
அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொரு
மணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும்
அப்போது பேய்கள் எல்லோருந் தானழுது
இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும்
உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும்
தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண்
என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை
பார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க் 300

காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும்
என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து
உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும்
என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார்
அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடி
என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று
வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார்
அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும்
இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில்
ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்து
கைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார்
திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து
விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து
மலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவே
விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய்
அய்யா வுரைத்த ஆணை தவறாமல்
மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானை
அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணை
மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம்
தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும் 320

எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்து
அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி
மெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச்
சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும்
பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவே
வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே
மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும்
ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவே
வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே
வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன்
சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரே
தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும்
பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார்
உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள்
படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே
அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும்
செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும்
கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று
மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார்
இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து 340

அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே
மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய
இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி
அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்
மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்
அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்
முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென
ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்
சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே
என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்
அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி
கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை
நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்
மன்று தனையளந்த மாயத் திருநெடுமால்
என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார்

ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி
லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார்

வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன 360
விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே

மந்திரவாதிகளின் விசையடக்குதல்

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்
விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று
நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்
அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்
கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்
முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்
சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்
கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்
விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி
அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்
ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து
ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி
புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி
நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்
சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு
சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி
வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக் 380

கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்
சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்
கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்
சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்
கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து
என்ன விதமோ என்று மிகக்குளறி
மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி
எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி
சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி
தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்
பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக்

குறத்தி வருதல்

குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு
உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்
குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி
விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே
கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி
வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து
அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்
சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து
பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம் 400

விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்
உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர்
தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும்
நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார்
வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும்
பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண்
நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார்
அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால்
தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால்
என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர்
நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ
சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம்
எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று
சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி
வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில்
கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே
கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார்
நாட்டுக் குடைய நாராயணர் பாலன்
பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச் 420

சிறந்து தவசு செய்யு முறைமையினால்
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப்
பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல்
ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி
இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப்
பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம்
இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும்
போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான்
வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே
நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு
பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு
உந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால்
எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம்
அப்போது மலையில் வாழு மலையரசர்
இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோ
அதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்று சொல்லோங்காண்
பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டருமே
மாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும்
உபாந்திர வாகடமும் உபாயச் சமூலமதும்
மாயக் கருவும் மாரண வித்தையதும் 440

உபாயக் கருவும் உயர்ந்தகரு மோடிகளும்
தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும்
வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம்
எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும்
கட்டுடனே யிப்போ கருசமூ லத்துடனே
ஒக்கவைத்தோ மென்று ஓருடக்கா யுடக்கி
மிக்க என்முன்னே மேதினியீ ரேழறிய
ஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசா
நாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார்
உடனே மலையரசர் ஒக்க மனதலைந்து
குடலே மருண்டு குறுக முழிமுழித்து
வம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவே
தம்பெலங்க ளற்றுத் தலைசாய்ந் துடனயர்ந்து
மாட்டோமென்றோ மானால் மலைமிருகங் கேளாது
வீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாது
குடியிருப்பு நமக்குக் குன்றுமே லங்குமில்லை
படியீரே ழளந்த பரமனம்மை யிங்குவிடார்
அய்யாவுரைத்த ஆணை வழிப்படியே
மெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம்
அல்லாதே போனால் அம்மலையி லிருப்புமில்லை 460

எல்லா மறிந்து இனிப்போவ துமரிது
என்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்து
அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு
ஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரே
கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை
ஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனே
வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம்
என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு
சூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம்
மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம்
எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல்
எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும்
நல்லதுவே யென்று நாடி மலையரசர்
வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல்
எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார்
அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண்
மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர்
எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா
தங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே 480

இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள்
விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம்
மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு
உலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும்
இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும்
நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும்
என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார்
அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில்
வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம்
செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால்
நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னு
துரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள்
என்று சபித்தார் எம்பெருமா ளானவரும்
அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால்
சொன்ன நரகில் செத்திறந்து போவோமென
அன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார்
போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்து
வானோ ரறிய மந்திரமா ஞாலமற்று
மந்திர வித்ø மாமுனிவன் சாஸ்திரமும்
தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி 500
வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே
மெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதி
மேலோக மான வைகுண்ட ராச்சியமும்
பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே

மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும்
உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்கு
ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம்
சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார்

நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்
செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்
மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்
பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்
உண்டாகி வாழ்ந்து உலக மறிவதற்கு
குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும்
ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்து
வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே
என்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்து
மன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே

வைகுண்டர் தர்மம் கூறல்

இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்று
ஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ 520

காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ
வைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோ
அவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோ
எவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமே
என்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக்
கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார்
எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று
நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே
வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத்
தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும்
என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலே
நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க
எங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லி
சங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார்
நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள்
துரித முடனே தொல்புவியில் வாழுகின்ற
பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும் 540

அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும்
ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும்
கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும்
உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரே
மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ
உங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச்
சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ
வாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவே
தாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலே
மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு
உறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமே
பட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல்
கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ
சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல்
உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று
கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ
நாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு
புல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக்
கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும் 560

தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து
மங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே
நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியே
கூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலே
எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய
செய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே

அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டு
கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்
மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே

உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக்
குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில்
பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள்
விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே

பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லை
நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை
தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை
மையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார்

இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப்
புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு580
முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்
பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்

இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டு
ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்று
செப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்று
நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்

கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல்

நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்து
கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த
சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி
பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான்

வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டு
மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்
இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர்
விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான்

நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து
மூட மடைந்த முழுநீச மாபாவி
இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில்  600

ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி
சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில்
சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன்
ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி
சரடன் கரடன் சவுனி கெவுனியுடன்
முரட னுடனே மூர்க்கர் முழுமூடர்
படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக்
குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து
வாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடி
தோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடி
அம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடி
வம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூட
வெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடி
அடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடி
இத்தனை யார பாரத் துடன்நீசன்
தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து
வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில்
தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடி
கொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர
மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான்
கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம்
வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய் 620

நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே
துடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய்
ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும்
பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதே
ஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும்
மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால்
ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான்
தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால்
பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால்
கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான்
வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம்
வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ
நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும்
குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில்
வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று
மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல்
நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத்
தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்தி
ஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும்
அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண் 640

ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும்
சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும்
சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்று
தொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவே
என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன்
ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான்
ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன
வாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்று
நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண்
மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கி
ஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச்
சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி
ஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில்
ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்து
பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை
என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து
அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான்
சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலே
வேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண்
எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே 660

கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான்
தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசே
கர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும்
சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம்
கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டு
பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை
சாமிதர்மத் தாலே தோச மதையழித்து
நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும்
மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித்
தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து
நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து
வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து
ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான்
என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க
நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து
சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான்
எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன
சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே
நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான் 680

இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே
சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண்
தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்
பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும்
நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே
சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே
என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான்
மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான்
அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும்
இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால்
போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப்
பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப்
பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும்
சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம்
பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே
இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்
மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே
என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்
அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் 700
ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்
கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை

கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்

கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும்

மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி
ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்
மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும்

எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்

தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ

தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி 720
நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ

ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து
மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து
செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ

இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்
ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து
அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற
செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ

சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ

குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ

எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி
அவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா 740
செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா
இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான்

என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப்
பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம்
மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்று
கொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன்

வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்
சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ
ஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா
பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா

நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்
சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ

பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச்
சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை
வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான்
இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய்

காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி
நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் 760
வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்
தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன்

அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்
இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்

மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்
கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன்

ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்
சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்
ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்

என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க

பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்
தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான் 780
ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன
கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான்

அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான்
துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக்
கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்
வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன்

கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு
கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்
தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று
நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்

பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான்
கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான்
சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று
வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே

அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாட
கம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாட
கொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோட
பும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானே
இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை
குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி 800

இங்கேகொடு வாறேன் என்று கௌடனுமே
துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து
ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து
வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்
பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே
கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி
நீசன் விடைவேண்டி நீணில முமறிய
பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்
வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து
காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து
இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று
அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே
நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி
தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி
என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்
பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி

சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல்

ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு
ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்
ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்
நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி 820
நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே
செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்
கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்
தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே
ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்
வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்
பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்
கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்
சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ
நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே
பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி
நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்
தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை
அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து
வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்
நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச்
செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுது
கூடி நடந்தார் குருவே குருவேயென
நாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக் 840

கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார்
பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார்
அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்து
எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம்
வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து
முன்பு விதியால் முழுநரக செத்திறந்து
என்று சபித்து எம்பெருமாள் தானடந்து
பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே

சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று
நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர்
பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச்
சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும்

நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே
பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல
வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போட
வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார்

அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயா
செப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய்
தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையா
எப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன் 860

ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சே
வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி
கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்த
ஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே

முட்டப்பதி விஞ்சை 1

இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி
முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து
எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா
ஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா

ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு
மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்று
தாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப்
பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே

வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி
எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு
கண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்து
எண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே

மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய
கண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி
புண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து
எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே 880

மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்
உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச்
செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப்
பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே

வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து
செய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு
போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று
மெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ

மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்
தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்
இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்து
கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே

அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத்
தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து
என்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்
பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ

கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம்
கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும்
தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும்
பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே 900

காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம்
சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி
வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க
காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே

பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்
செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ
வல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே

இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும்
எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய்
சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய்
அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய்

நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா
என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா
உன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக்
கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடி
நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது
புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும்
கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல் 920

ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல்
பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று
கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத்
துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர்
சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று
வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார்
பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறிய
மண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத்
தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டி
கருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்து
சீமை நருளறியத் தேசந் தனிலாண்டு
தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து
மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில்
தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும்
எல்லா மடக்கி யானுன் னிடமிருந்து
நல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக்
காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே
ஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலே
நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில்
செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன் 940

வாகனத்  தேரும் வருமா ஞாலத்திருந்து
கோகனக மாலே குணமாக வேகூடிக்
காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார்
தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய்
இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ
வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ
பதறாதே போயிருநீ பாரத் தவசியிலே
குதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலே
வாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு
போறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு
என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென
மன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக்
கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார்
பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள்
விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத்
தெச்சணா பூமி சென்று தவத்ததிலே
உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார்
நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே
படந்தார மாயன் பண்டு தவமிருந்த
தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார் 959