புனித அகிலத்திரட்டு அம்மானை

அத்தியாயம் – 15

திருஏடு வாசிப்பும், பாராயண உரையும்

🐚திருஏடுவாசிப்பு

 

வாசித்தவர்கள்:

1. ரெத்தினபாய் அம்மா
2. சாந்த குமாரி அம்மா
3. ரேணுகாதேவி அம்மா
4. கலைவாணி அம்மா
5. ராதா கிருஷ்ணன் அய்யா

 

🐚பாராயண உரை

 

 

📖உலகப் பொதுமறையாம் “அகிலத்திரட்டு அம்மானைக்கு” நமது திரு. சிவதவசி அய்யா அவர்களின் முழுமையான பாராயண உரையை

திருஏடுவாசிப்பு மற்றும் விளக்கவுரை 

 

விளக்கவுரை:

சிவ தவசி அய்யா

வாசித்தவர்கள்:

1. ரெத்தினபாய் அம்மா
2. சாந்த குமாரி அம்மா
3. ரேணுகாதேவி அம்மா
4. கலைவாணி அம்மா
5. ராதா கிருஷ்ணன் அய்யா

அய்யா துணை

திருக்கல்யாணம்

வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன்
வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக
ஊருமிக அறிவதற்கு ஓலை தானும்
உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர்
பாருடனே சங்கமது திரண்டு கூடிப்
பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க
சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு
தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற் றன்றே

தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது
துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும்
கூன்றிருஷி தேவரிஷி வேத மானக்
குணயிருஷி கிணயிருஷி குலமா மாது
தான்றுசர சோதிபக வதிமா மாது
சதாகோடி தேவரம்பை சங்க மாக
மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி
மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே

வானமதில் டம்மான முழக்கத் தேவர்
மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற
நாரிமார் குரவையிட நமனு மாற
தானமுறை மாமடவார் சமனங் கூறத்
தரணிதனில் நாரணர்க்குந் தைய லான
மேனமுகில் மாதருக்கு மணமா மென்று
மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார்

பந்தலுக்கு நமனாதி கால தாகப்
பக்கம்பதி னைந்தும்வளை பரப்ப தாகச்
சந்தமுடன் மேற்கட்டி மறைய தாகச்
சாருமேல் மேய்ந்ததுவே சமய மாக
அந்தமுறை சூரியனும் விளக்க தாக
அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச்
சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத்
தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே

சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம்
திருமாலி னடிபணிந்து சொல்வா ரப்போ
பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்துப்
பேணியமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும்
உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன்
உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம்
நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும்
நிசவேலை யின்னதென நிகழ்த்து வீரே 20

தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன்
திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறம லெனக்கு முன்னே
மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனொடு வாயு தானும்
நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று
தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே

சிந்தித்த வுடனே யுந்தத் தேன்மொழி மாத ரெல்லாம்
வந்தவ ரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற
சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைக ளொக்கத்
தந்துநற் புவியை யாளத் தருவீரென் தலைவா என்றார்

தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே
தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள்
மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற
மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு
தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி
பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்

புவியாள வைப்பேனென வுரைத்தீ ரெங்கள்
பொன்மானே கண்மணியே புரந்த மாலே
கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே
காயாம்பு மேனியரே கடவு ளாரே
இவிலோகக் கலியதிலே பிறந்த தாலே
இதுநாளும் வரையன்ன மீந்த பேர்கள்
செவியாலுன் பதமடைந்தா லவர்க ளேது
செய்வார்க ளெங்களொடு சேர்க்கை தானோ

சேர்க்கையுண்டோ எனமொழிந்த மானே பொன்னே
தேன்மொழியே யுங்களுக்குத் தெரியா வண்ணம்
வார்த்தையிது சொல்லாதே நமது வாழ்வும்
மக்களுட வாழ்வதுவு மொன்று போலே
மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும்
மனமதிலே நினைத்திருக்கும் வளமை யாலே
கோர்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை
கூறிமிகக் கேட்டுமணங் கூடு வேனே 40

மணங்கூடு னேனென வுரைக்க மாயன்
மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம்
அணங்குஇன வழிபோலே யவர்கள் வந்து
ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக்
குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக்
கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால்
பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்பப்
பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே

பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும்
பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர்
உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும்
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு
சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார்

ஆண்டவரே யிப்பரிசந் தருவீ ரானால்
யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு
குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம்
மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள்
விலையடிமை யானோங்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே
பாவையரு மக்களுமும் பக்கந் தானே

பக்கமது என்றவுடன் மாயன் தானும்
பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம்
ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும்
தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை
தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே

கைப்பிடித்துத் தாருமென வுரைத்தீ ரையா
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர்
எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய
இவ்வுலகி லவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார் 60

திருமுகூர்த்தம்

ஈந்திடவே மாயவருந் தங்கத் தாலே
இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ
மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ
ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ
தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி

தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடு
தமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார்
கேலிமிக வுரையாதீ ரெனக்கு இன்னம்
கெணிமடவா ரநேகமுண்டு மணங்கள் செய்ய
சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ
தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம்
மாலினுட சூட்சமகா கோடி யுண்டு
மனதுசடை யாமல்மிக வாழுவீரே

வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன்
மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன்
மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள்
மனதலைந்து எனைஇகழ்ந்து மாளா துங்கோ
தோழிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன்
தோகையரே நீங்களெல்லா மெனது பாயம்
நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும்
நாரணரி னடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம்

சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம்
தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ
என்னுடையத் தொழிலிதுவே உங்க ளோடு
இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும்
பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மைப்
போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே
கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு
கருணைபதித் தெருவீதி வருகின் றாரே

சிந்து

தெருவீதி நாம்வருவோம்-எந்தன்
தேவியரே கன்னிநாயகமே
மருவினிய கன்னியரே-பதி
வலங்கள்சுற்றி நாம்வருவோம்

கண்மணியே காரணரே-ஓகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழ ளந்தவரே-ஓகோ
மாயவரே பதிவலம்வருவோம்  80

பெண்ணரசே மாமயிலே-நமது
பொறுமைப்பதி வலம்வருவோம்
தண்ணமுள்ளத் தேவியரே-நமது
தருமபதி வலம்வருவோம்

ஆண்டமணி நாயகமே-உலகு
ஆண்டருளு மெங்கண்மணியே
காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள்
கணவனாரே நாம்வலம்வருவோம்

பொறுமைப்பதி வலம்வருவோம்-கலிப்
பொடியயாமம் போட்டிடுவோம்
தருமமது தழைக்கச்செய்வோம்-பதி
தானேவலம் நாம்வருவோம்

பொல்லாத வகையழித்து-சுவாமி
புதுப்பூமி தோணவைத்துக்
கல்லாதார் கருவறுத்து-சுவாமி
கதியபதி வலம்வருவோம்

நாடும்பதி தலங்கள்வாழும்-பெண்ணே
நம்முடைய இனங்கள்வாழும்
கேடுகலி கோடுஅறும்-பெண்ணே
கிளர்ந்தபதி வலம்வருவோம்

ஆகாத பேரையெல்லாம்-சுவாமி
அக்கினிக்கு விருந்தளித்து
வாகாகத் தர்மபதி-சுவாமி
வாழும்பதி வலம்வருவோம்

முன்குறோணி உதிரமதால்-பெண்ணே
உதித்துவந்தக் குலங்களெல்லாம்
தன்குணத்தால் மாண்டுபோக-பெண்ணே
தர்மபதி வலம்வருவோம்

மாற்றானொ ழியவேணும்-சுவாமி
மக்களெல்லாம் வாழவேணும்
காத்தோரைக் கைவிடாமல்-நாமள்
கருணைபதி வலம்வருவோம்

தெண்டமிறை பொய்களவு-பெண்ணே
செய்யும்வண்டக் குலங்களெல்லாம்
கொண்டகலி கூடமாண்டு-குரு
நாதர்பதி வலம்வருவோம்

வீணான கலியுகத்தை-சுவாமி
வெய்யோனுக் கமுதளித்துச்
சாணாரை வைத்தாள-சுவாமி
தர்மபதி வலம்வருவோம்  100

நாடும்பதி துலங்குதடி-பெண்ணே
நல்லசிலை குதிக்குதடி
ஆடுமாடு அருகுதடி-கர்த்தா
ஆவினங்கள் தோணுதடி

நல்லபதி துலங்கணுமே-சுவாமி
நாடுதர்ம மாகணுமே
பொல்லாப்பது ஒழியணுமே-சுவாமி
புத்தியொன்றாய்க் குவியணுமே

கோவில்தெரு துலங்கணுமே-நம்மள்
கோட்டைவெளி யாகணுமே
தேவருட நல்திருநாள்-பெண்ணே
தினமும்வந்து கூடணுமே

தங்கத்தொட்டில் தண்டாயமும்-சுவாமி
தாண்டும்பதி வீதிகளும்
சங்கமுடன் டம்மானமும்-சுவாமி
தலத்தில்வந்து தோணணுமே

கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி-பெண்ணே
கொத்தளமாய் மேடைசெய்து
நாட்டையெல்லாம் தான்கிலுக்கி-பெண்ணே
நமக்குப்பதி யேறணுமே

நம்பினோரைக் காக்கணுமே-சுவாமி
நாடுகட்டி யாளணுமே
அல்பலங்க ளேறணுமே-சுவாமி
அவதாரங்கள் நடத்தணுமே

சிங்காசன மேறணுமே-பெண்ணே
தீவட்டிகள் போடணுமே
கண்காட்சை காணணுமே-நானும்
கன்னியரைக் கைப்பிடித்தால்

பாக்கியங்கள் பெருகணுமே-சுவாமி
பாரிலுள்ளோர் காணுதற்கு
ஆக்கிநாங்கள் படைக்கணுமே-சுவாமி
அமுதருந்தி வாழணுமே

மக்கள்பெற்று வாழணுமே-பெண்ணே
வந்துவென்றான் கால்பிடித்து
ஒக்கல் நின்றோ ராடணுமே-பெண்ணே
உற்றபள்ளி மெத்தைசூழ

பால்பவிசு பெருகணுமே-சுவாமி
பஞ்சணையில் கொஞ்சணுமே
தூலருமை யறியாமலே-கலி
தொல்புவியு மயங்கணுமே  120

சமுசாரி யாகணுமே-பெண்ணே
தலையிற்சோறு சுமக்கணுமே
ஓவுதாரி யாகணுமே-பெண்ணே
உங்களைநா னடிக்கணுமே

அயலூரு போகணுமே-சுவாமி
அழைக்கநீரும் வரவேணுமே
கயல்விழிமா ரொருவர்க்கொரு-சுவாமி
கத்துதல்கள் கொள்ளணுமே

நானும்வந்து நிரத்தணுமே-பெண்ணே
நல்லமொழி சொல்லணுமே
தேனும்பாலும் போலநாமள்-பெண்ணே
தேசமதில் வாழணுமே

கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே

காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்

செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா

சோபனம்

சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே 140

துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே 144